நீ வந்து பேசுகையில்
பூக்களுக்கு வருத்தம்தான்.
காற்றிலேயே தேன் குடித்து
திரும்பி விடுகின்றனவாம்
தேனீக்கள்!!!!


****************************

இனி மொட்டைமாடியில்
தூங்காதே.
போகவே மாட்டேனென
அடம்பிடிக்கிறது,
நிலா!!!!!!!!!!!!

****************************


குறைகளோடு பிறக்கும்
எனது கவிதைகள் யாவும்
உன் முத்தம் வாங்கி
முழுமையடைகின்றன!


****************************

உன் வீட்டு ரோஜா மொட்டு
மலரவே இல்லையென குழம்பாதே.
மலர்தான் உன்னை முத்தமிட
எப்பொழுதும் இதழ் குவித்து ஏங்குகிறது!

****************************

இரண்டு முத்தங்கள் கொடுத்து
இனிப்பானதை எடுத்துக்கொள் என்றாய்.
இயலாத செயலென
இரண்டையும் திருப்பிக் கொடுத்தேன்.


****************************

தனியே நீ முணுமுணுக்கும்
இனிய பாடல்கள்
இசைத்தட்டில் ஒலிக்கையில்
இனிமை இழப்பதேன்?


****************************

உபசரிப்பின்றி உலர்ந்து கிடக்கிறது…
எதிர்பாராத கணத்தில்
சட்டென நீ தந்த ரகசிய முத்தமொன்று!

****************************

உன்னைப்போலவே
உனது முத்தங்களுக்கும் காதல் அதிகம்தான்.
முதல் நாளின் கடைசி முத்தம்
அடுத்த நாளின் முதல் முத்தத்தை
சந்திக்கும் வரை உறங்குவதேயில்லை

****************************